மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

தீவுகளில் ஒன்றான காரைதீவு

சப்த தீவுகளில் ஒன்றான காரைதீவு 12.09.1923 இல் முதல் அரசு ஒப்புதலால் காரைநகர் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. 1987ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட தட்சணகைலாய புராணத்திலும் காரைநகர் என்ற வழக்கு இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்க விடையமாகும்.
இந்த வகையில் யாழ்ப்பாணக் கடல் வழிப்பாதையிலே காரைதீவும், ஊர்காவற்றுறையும் அமைந்திருப்பதனால் அவை புராதன காலத்திலிருந்து கேந்திர முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகின்றன. எனவே யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆட்சி புரிந்தவர்கள் அவ் இரு தீவுகளுக்கும் இடையிலான கடல் வழிப் பாதையினை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு கால் நிலையங்களை அமைத்துக் கொள்வது வழமையாயிற்று. இதன் காரணமாகவே போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தை கைப்பற்றிய பின் இந்நுழைவாயிலின் கடல் மத்தியில் ‘ஐரிக்’ (உருண்டி) கோட்டையைக் கட்டி முக்கிய காவற்தளமாகப் பயன்படுத்தினர். அக்கோட்டைகளில் இருந்து கொண்டு வங்காள விரிகுடாவில் இருந்து வரும் கப்பல்களை கண்காணித்தமை இவ்விடத்தின் முக்கியத்துவத்தை தெரியப்படுத்துகின்றது.



ஊர்காவற்றுறையை போர்த்துக்கேயர் ‘காயெஸ்’ என்று அழைத்தனர். எனினும் காரைநகர் துறைமுகத்துக்கு அருகில் ‘வோர்ட்டலெடு காயெஸ்’ எனும் கோட்டையைக் கட்டினர். இதன் அழிபாடுகள் இராசாவின் தோட்டம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வகையில் காயாஸ் என்ற பெயர் முதலில் காரைநகர் என்ற துறைமுகத்துக்கு இருந்ததாகவும் இதன் பின்னரே ஊர்காவற்றுறையை குறித்ததாகவும் பேராசிரியர் சிவசாமி கூறுவது அவதானிக்கத்தக்க விடயமாகும்.
மேலும் சோழர் ஊர்காவற்றுறையையும், காரைதீவையும் தங்கள் முக்கிய கடற்படைத் தளமாகக் கொண்டது போல் போர்த்துக்கேயரும் இக்கடற் பரப்பை முக்கிய காவற்தளமாகக் கொண்டனர். இந்தவகையில் வங்காள விரிகுடாவிற்கு வரும் கப்பல்களுக்குத் துணை செய்யும் வகையில் காரைதீவுக்கு வடமேற்கே ‘கோவளம்’ என்னும் இடத்திலே ஓர் வெளிச்ச வீட்டையும் அமைத்து காரைநகரை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கொண்டிருந்தனர். கோவளம் என்ற பெயர் வரக் காரணத்தை நோக்குகின்ற பொழுது கடலுக்குள் நீண்டிருக்கும் கடற்பரப்பை கொண்டதனால் இப்பெயர்பெற்றது எனலாம். மேலும் கேரள நாட்டில் எழில் மிகு கடற்கரை வனப்பைக்கொண்ட கோவளம் என்ற இடம் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் போர்த்துக்கேயரின் நடவடிக்கைகள், காரைநகரின் அமைவிடம் யாழ்ப்பாண இரச்சியத்தின் பாதுகாவலுக்கு அத்தியாவசியமாக இருந்ததை எடுத்துக்காட்டுகின்றது- போர்த்துக்கேயர் கத்தோலிக்க மதத்தைப் பரப்பவே இங்கு வந்தனர் இந்த வகையில் இந்து ஆலயங்களை அழித்து கோட்டைகளையும், அரண்களையும், மாளிகைகளையும் இவர்கள் கட்டினார்கள் என்று யாழ்ப்பாண வைபவ மாலை கூறுவது உற்று நோக்கத்தக்க விடயமாகும். இவ்வாறு கட்டப்பட்ட கோட்டையில் மிகவும் முக்கியத்துவம் பெறுவது காரைதீவிற்கு அண்மையில் உள்ள கடற்கோட்டை ஆகும். மேலும் போர்த்துகேயரின் பின் ஒல்லாந்தர் காலத்திலே காரைதீவு களபூமித்துறை யானைத் துறைமுகமாக இருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
 அந்த வகையில் ஒல்லாந்தர் வியாபாரத்தில் யானை வியாபாரம் முதலிடம் வகித்தது. இவர்கள் வர்த்தக நோக்கத்திற்ககாவே இலங்கை வந்ததனால் வருமானத்தை எவ்வளவு கூடப் பெறமுடியுமோ அவ்வளவிற்கு பெறமுயற்சித்தனர். இலங்கைக் காடுகளில் உள்ள யானைகளைப் பிடித்தும், திறையாகவும் பெற்று இந்திய அரசுகளுக்கு விற்பதில் பெரும் லாபத்தை ஈட்டினர். யானைகள் யாவும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவரப்பட்டு காரைதீவுத் துறையில் வைத்து கப்பல் மார்க்கமாக இந்தியாவில் உள்ள வங்காளம், விஜயநகரம், கொல்கொண்டா, தஞ்சாவூர் முதலிய பேரூர்களில் இருந்து வந்த வியாபாரிகள் யானைகளை ஏலத்தில் வாங்கிச் சென்றனர் என உரையாடலின் போது பேராசிரியர் சிவசாமி அவர்கள் குறிப்பிட்டார்.
கப்பலோட்டிகளுக்கு வரப்பிரசாத மாக அமைந்த கோவள வெளிச்சவீடு பற்றி நோக்குகின்ற பொழுது இவ் வெளிச்ச வீட்டுக் கோபுரமானது காரைதீவில் இருந்து வடமேற்காகவும், அதேபோல் யாழ்ப்பாணத்திலிருந்து வடமேற்காக 25 கிலோ மீற்றர் தூரத்திலும் அமைவுபெற்று விளங்கு கின்றது. அந்தவகையில் 1916ம் ஆண்டு போர்த்துக்கேயரால் இவ்வெளிச்ச வீடு கட்டப்பட்டது. 30 மீற்றர் அல்லது 98 அடி உயரமான வட்டக் கல்லினால் அமைக்கப்பெற்ற வெள்ளைநிறக் கோபுரமாகத் திகழ்கின்றது.
இக்கோபுர மானது பாக்குநீரிணையில் உள்ள ஒரு முனையிலுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வெளிச்ச வீட்டின் ஒளிச்சமிக்ஞை பற்றி நோக்குகின்ற போது இதிலிருந்து இரண்டு வெள்ளை ஒளிகள் ஒவ்வொரு 10 வினாடிகளுக்கு ஒருமுறை விட்டு விட்டு ஒளிரும் வண்ணம் அமைவு பெற்றுக் காண ப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி