மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

நீளமான தீவு என்பதாலா நெடுந்தீவு என்று பெயர் வந்தது?


imageயாழ். குடாநாட்டின் தென்மேற்குத் திசையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஏறக்குறைய 32 கிலோ மீற்றருக்கு அப்பாலும் இராமேஸ்வரத்தில் இருந்து 32 கிலோ மீற்றர் தொலைவிலும் நெடுந்தீவு அமைந்துள்ளது.
இத்தீவு கிழக்கு மேற்காக 9 கிலோ மீற்றர் நீளத்தையும் வடக்குத் தெற்காக 6 கிலோ மீற்றர் அகலத்தையும் ஓர் சரிந்த இணைகர வடிவில் சுமார் 30 கிலோ மீற்றர் சுற்றளவையும் கொண்டது.
இத்தீவு தலைத் தீவு பசுத் தீவு பால் தீவு அபிஷேகத் தீவு தயிர் தீவு முதலான பெயர்களால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழை க்கப்பட்டு வந்தன. எனினும் இப் பெயர்கள் யாவும் காரணப் பெய ர்களாகவே அமைந்தன.
நெடுந்தீவு என்ற சொல்லில் நெடும் என்பது இத்தீவின் நீளத்தைக் குறிக்கவில்லை. அது யாழ் குடாநாட்டில் இருந்து நெடுந்தொலைவில் இருப்பதையே குறிக்கும். ஆகவே குடாநாட்டின் தொலைவில் இத்தீவு இருப்பதனால் நெடுந்தீவு என்ற பெயர் ஏற்பட்டது எனலாம்.
மேலும் நெடுந்தீவு மக்கள் பண்டைய காலத்தில் வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்துள்ளனர். தென்னிந்தியாவில் உள்ள நாகபட்டினம் இராமேஸ்வரம் போன்ற இடங்களிற்கு மக்கள் சென்று பண்டமாற்று செய்து தமக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கமாக இருந்தது.
இதற்காகப் பாவிக்கப்பட்ட துறைமுகம் பெரியதுறை என அழைக்கப்பட்டது. இங்கிருந்து மக்கள் பாய் வள்ளங்களிலும் வத்தைகளிலும் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை புங்குடுதீவு ஆகிய இடங்களுக்கு பிரயாணம் செய்தனர்.
வெளிநாட்டிலிருந்து போத்துக்கேயரும் ஒல்லாந்தர்களும் பாய்க் கப்பல் மூலம் பொருட்களை இத்துறை மூலமே இற க்கினர். இவற்றைவிட வேறு சில துறை முகங்களும் இருந்தன. அவையாவன: கிழக்கே - கிழக்குத் துறையும் வடக்காக - தாளைத் துறை குடுவிலித் துறை ஆகியனவும் தெற்கே - குவி ந்தா துறை வெல்லா துறை என்பனவும் ஆகும்.
எனினும் பெரிதுறை எனப் பெயர்கொண்ட இத்துறையை மிகவும் பெரிய துறைமுகமாக அக்காலத்தில் விளங்கியது. பெரியதுறையானது நெடுந்தீவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது.
மன்னர் ஆட்சிக் காலங்களிலும் இத்துறைமுகமே வழக்கிலிருந்தது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் இத்துறையிலிருந்து எவரும் இந்தியாவிற்கு செல்லாதபடி தடைவிதிக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது.
மேலும் இத்துறைமுகத்தை அண்டியே வெடியரசனுக்கும் மீகாமனுக்கு சண்டை நடந்ததாக வரலாறு கூறுகிறது.
இவ்வாறான வரலாற்றுப் பின்னணி அடிப்படையில் நெடுந்தீவு வெளிச்ச வீடுகள் பற்றி நோக்குகின்ற போது மாவிலித் துறைமுகத்திலும் குவிந்தாவிலும் இவை காணப்படுகின்றன. முதலில் மாவிலித் துறைமுக வெளிச்ச வீடு பற்றி நோக்குவோம்.
மாவலி துறைமுகத்திற்கு ‘மாவிலி’ என்ற பெயர் வந்ததற்கு பல கதைகள் கூறப்படுகின்றன. மாவிலி என்ற பெயர் வரக் காரணம் தென் இந்திய அரசன் மாவல்லவன் இத்தீவை ஆண்டதாகவும் அதனால் மாவல்லபுர மக்கள் இத்துறை முகத்திற்கு ‘மாவிலி’ என அழைத்ததாகவும் ஒரு கர்ண பரம்பரைக் கதை உண்டு. இருப்பினும் இதற்கான சரித்திரச் சான்றுகள் இல்லை. ஒல்லாந்தர் நெடுந்தீவை ஆட்சி செய்த காலத்தில் குதிரைகளை இத்துறையூடாக இறக்கி ஏற்றினார்கள்.
‘மா’ என்ற சொல்லுக்கு குதிரை பெரிய என்ற அர்த்தங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே குதிரைகள் ஏற்றி இறக்கியதனாலேயே மாவிலி என்ற பெயர் உண்டாயிற்று என்பதே உண்மையான காரணமாகும்.
இத்துறைமுகமே இன்று நெடுந்தீவு மக்கள் ஏனைய தீவுகளுக்கும் யாழ். குடாநாட்டிற்கும் கடல் மூலம் பிரயாணம் செய்யப்படும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகிறது. இது ஏறக்குறைய 300 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டுள்ளதாக காணப்படுகிறது.
முற்காலத்தில் வத்தைகள் மூலமும் பாய் வள்ளங்கள் மூலமும் பிரயாணம் செய்த மக்கள் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தின் பிற்பகுதி தொடக்கம் இன்று வரை இயந்திரப் படகுகள் மூலமும் இயந்திரம் இணைக்கப்பட்ட வள்ளங்கள் மூலமும் பிரயாணம் செய்கின்றனர்.
அந்த வகையில் ஒல்லாந்தரால் கட் டப்பட்ட இந்த மாவிலித் துறைமுகத்தில் உள்ள வெளிச்ச வீடு மூன்று உருளைத் தூண்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துக் கட்டப்பட்டது போல் அமைவு பெற்று அதன் மேல் கூம்பு வடிவமான ஓர் முடியும் காணப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு வகையான வெளிச்ச வீடு களும் கப்பல் திசை மாறாது செல்வதற்கு ஒவ்வொரு வகையான ஒளிச் சமிக்ஞை களை கொண்டுள்ளது. இந்த வெளிச்ச வீடு 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது இரவில் தொடர்ந்து ஒளியை வீசிய வண்ணம் அமைவுபெற்று விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அடுத்தாக குவிந்தா வெளிச்ச வீட்டைப் பார்ப்போம்.
இது நெடுந்தீவின் தென்கிழக்கே காணப்படும். முக்கோண வடிவில் கட்டப்பட்ட வெளிச்சவீட்டுக் கோபுரமாகும். இதனையும் ஒல்லாந்தர்களே கட்டினார்கள். இவர்களால் கட்டப்பட்ட இக்கோபுரத்திற்கு இராணியின் கோபுரம் எனப் பெயரிட்டார்கள். இதுவே நாளடைவில் மக்களால் குவிந்தா என அழைக்கப்பட்டது.
நெடுந்தீவை நோக்கி வரும் கப்பல்கள் திசைமாறிச் செல்லாதிருக்க இது ஒரு திசைகாட்டிக் கோபுரமாக விளங்கியது. குவீன்டவர் என்ற பெயரைக் கொண்டு சிலர் இக் கோபுரத்தை பிரித்தானியார்களே கட்டி யிருக்கக் கூடும் என்று கருதிய பொழுதி லும் இக்கோட்டை ஒல்லாந்தர் காலத்திலேயே கட்டப்பட்டது.
(விநாயகமூர்ததி சு. 2003.72-80) இதனை மூதாதையரின் கர்ண பரம்பரைக் கதைகளிலும் அக் கோபுரத்தின் கட்டட அமைப்பு காலம் என்பவற்றைக் கொண்டும் அறிய முடி கிறது.
இந்த வகையில் கப்பலுக்கு வழி காட்டும் இந்த வெளிச்ச வீட்டின் உயர மானது 23 அடி அல்லது 5 மீற்றர் எனவும் இதன் ஒளிச் சமிக்ஞையானது இரவில் தொடர்ந்து எரியும் வண்ணம் காணப்படுவதாக அமைந்துள்ளது. இன்று இக்கோபுரம் அழிவடைந்து பாழ்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை
மாதோட்டம் போல இலங்கையின் யாழ். மாவட்டத்தில் உள்ள மற்றொரு துறைமுகம் ஊர்காவற்றுறை ஆகும். இத்துறைமுகத்திற்கு அண்மையில் ஓர் கடற் கோட்டை உள்ளது. இக் கோட்டையானது ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டது. இதனுடன் ஓர் வெளிச்ச வீட்டையும் இவர்கள் கட்டினார்கள் என அறியமுடிகிறது.
இவர்கள் வெளிச்ச வீட்டை அமைத்தமைக்கான காரணத்தை நோக்கின் வர்த்தக நடவடிக்கைக்காகவே அமைத்தனர் என அறிய முடிகின்றது. முற்காலத்தில் இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டு இத்துறைமுகம் வழியாக இந்தியாவிலிருந்து பெரிய படகுகள் மூலம் கள்ளிக்கோட்டை ஒடுகள் பிறபொருட்கள் என பல பொருட்கள் சுமார் 50 ஆண்டுகளிற்கு முன் இறக்குமதி செய்யப்பட்டன. ஊர்காவற்றுறையில் இருந்த முற்கால மக்கள் சிறந்த கப்பலோட்டிகளாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் இந்தியா மலேசியா பர்மா போன்ற நாடுகளுக்கெல்லாம் பாய்க் கப்பல்களில் சென்று வணிகம் செய்திருக்கிறார்கள் என அறிய முடிகிறது. நெடுந்தீவு மக்கள் குறிக்கட்டுவான் துறைமுகத்தில் இருந்து பிரயாணம் செய்யத் தொடங்குமுன் ஊர்காவற்றுறையிலிருந்து படகு மூலம் சென்று அங்கிருந்தே தமது யாழ்ப்பாணப் பிரதேசத்தை சென்றடைந்தார்கள். அந்த காலத்தில் ஊர்காவற்றுறையே முக்கிய துறையாகவும் மக்கள் தங்கிச் செல்வதற்கும் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குமான கடைகள் நிறைந்த பட்டினமாகவும் விளங்கியது.
மேலும் 10ம் நூற்றாண்டில் வட இலங்கைப் படையெடுப்பானது ஊர்காவற்றுறை முகத்தினூடாக மேற்கொள்ளப்பட்டதாக பேராசிரியர் எஸ். பரணவிதான குறிப்பிடுவதும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் 11ம் நூற்றாண்டில் முதலாம் பராக்கிரமபாகு படையெடுத்த இடமாகவும் இது காணப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் 11ம் நூற்றாண்டுக்குரிய 2ம் இராசாதி இராசசோழனது பல்லவராசன் செப்பேட்டில் இவர்களது துறைமுகம் கைப்பற்றப்பட்ட செய்தி கூறப்படுகின்றது. இந்த வகையில் இத்துறைமுகத்தினூடாக வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் மேலாதிக்கம் செல்வாக்கு செலுத்தியதென்பதனை அறிய முடிகின்றது.
மேலும் கி. பி. 12ம் நூற்றாண்டில் ஊர் காவற்றுறை தென் இந்திய வணிகர்களின் தங்குமிடமாக இருந்தது என்பதனை முத லாம் பராக்கிரமபாகு காலத்தில் வெளியிடப் பட்ட நயினாதீவுக் கல்வெட்டு எடுத்துக் காட்டுகிறது. நாகபூசணி அம்மன் கோயி லின் நுழைவாயிலில் காணப்படும் இக்கல் வெட்டு மேற்கூறிய மன்னன் காலத்தில் வெளியிடப்பட்ட தமிழ் மொழிக் கல்வெட் டாகும். அரசன் வணிகர்களுக்கு வழங்கிய சலுகைகள் பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடுகி றது. பரதேசிகளான வெளிநாட்டு வணிகர் கள் குறிப்பாக பிற துறைமுகங்களைச் சேர்ந்தவர்கள் ஊர்காவற்றுறைக்கு வணிகம் பொருட்டு வந்து கூட வேண்டும் எனவும் அரசனுக்கு தேவையான யானை குதிரை களைக்கொண்டு வரும் மரக் கலங்கள் கட லில் விபத்துக்குள்ளானால் அதில் நான்கில் ஒரு பங்கு அரசுக் கருவூலகத்திற்கும் மீத முள்ள மூன்று பங்கு அதன் சொந்தக்கார ருக்கும் சென்றடையும் அதேவேளையில் வியாபாரத்திற்காக வரும் மரக்கலங்கள் கடலில் விபத்துக்குள்ளானால் மரக் கலத்தில் உள்ள செல்வத்தின் மதிப்பில் பாதி அரசுக் கருவூலகத்திற்கும் மீதமுள்ள பாதி உரிமையாளருக்கும் சென்றடையும் என இக்கல்வெட்டு கூறுகிறது. சாதாரண வியாபாரம் செய்யவரும் மரக்கலங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைக் காட்டிலும் யானை குதிரை ஏற்றிவரும் மரக்கலன்களுக்கு கூடுதலான சலுகை வழங்கப்பட்டதிலிருந்து அரசன் இத் துறைமுகத்தில் யானை குதிரை இறக்குமதிக்கு ஊக்கம் காட்டியமை புலனாகிறது- (யெயக்குமார் பா. 2001: 167 – 169)
இக்கல்வெட்டு தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளதால் அக்காலத்தில் தமிழ் வணிகர்களின் செல்வாக்கு இத்துறைமுகத்தில் இருந்ததை தெளிவுபடுத்துவதாக உள்ளது. ஆந்திர மாநிலம் மேட்டுப்பள்ளியில் காணப்பட்ட அன்னப்போத்துரெட்டியின் தமிழ்மொழிக் கல்வெட்டிற்கு ஒப்பானதாக இக்கல்வெட்டை கருதலாம். இரண்டிலும் கடல்சார் வணிகர்களுக்கான சலுகைகள் பேசப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 2ம் இராஜராஜ சோழனுடைய திருவாளங்காட்டுச் செப்பேட்டில் இந்த இடப்பெயர் ஊராத்துறை என்று குறிப்பிட்டுள்ளது. இந்நாட்டிற்கு பின்வந்த ஒல்லாந்தரும் இதனையே பயன்படுத்தினார்கள். மாகனின் படைகள் தங்கி இருந்த இடங்களில் சூகரதித்த (ஊர்காவற்றுறை) என்பதும் ஒன்றென்று கூறப்படுகின்றது. அந்த வகையில் 13ம் நூற்றாண்டில் கலிங்கமாகன் படைகள் இங்கு கோட்டையைக் கட்டி படைவீரர்கள் நிலைகொண்டிருந்தனரென சூளவம்சம் கூறுவது குறிப்பிடத்தக்க விடயமாகும். 1ம் பராக்கிரமபாகுவின் தமிழ்க் கல்வெட்டு ஒன்று இங்கு நடைபெற்ற வணிகம் பற்றி கூறுவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் 2ம் பராந்தகசோழன் காலத்தில் (கி. பி. 960) அவனது படைகள் ஊராத்தோட்டையில் வந்திறங்கியுள்ளது என்ற செய்தியும் ஊர்காவற்றுறை திருகோணமலை ஆகிய துறைகள் சோழரின் படைகள் தங்கியிருந்த தளங்கள் என்பதனையும் அறிய முடிகின்றது.
இருளில் கரையை அடையாளப்படுத்தும் இவ் வெளிச்சவீடானது 35 அடி உயரமானதாக அல்லது 11 மீ உயரமுடையதாக அமைவு பெற்று காணப்படுகின்றது. இந்த வகையில் இதன் ஒளிச் சமிக்ஞை பற்றி நோக்குகின்ற போது 5 செக்கனிற்கு ஒரு முறை விட்டு விட்டு சிவப்பு ஒளி ஒளிரும் வண்ணம் இது அமைவுபெற்றுள்ளது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி