மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

அல்லைப்பிட்டி, மண்கும்பானின் மணல் வளம்

அல்லைப்பிட்டி 1977
'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' செய்வது போல் அல்லைப்பிட்டி, மண்கும்பானின் மணல் வளம் சுமாராக 14 வருடங்கள் கொள்ளையடிக்கப் பட்டபின்னர் அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும், கல்விமான்களும் கொஞ்சம் விழித்துக் கொண்டனர். இவர்கள் ஒன்று சேர்ந்து இம் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என 1984 இல் முடிவெடுத்தனர்.
இதன் முதலாவது கட்டமாக ஒரு 'கண்டன ஊர்வலம்' ஒன்று இவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டது.
இந்த ஊர்வலத்தை அல்லைப்பிட்டி, மண்கும்பானைச் சேர்ந்த துடிப்புள்ள, துணிச்சலுள்ள இளைஞர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் இளைஞர்கள் மட்டும் சேர்ந்து ஊர்வலம் நடாத்துவதாயின் ஆகக் கூடுதலாக 30 வரையான இளைஞர்களை மட்டுமே சேர்க்க முடியும். சமூக ஆர்வலர்களையும் சேர்த்துக் கொள்வதாயின் மொத்தம் ஒரு 50 பேரை மட்டுமே சேர்க்க முடியும். ஆகவே இவர்கள் கடுமையாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது அல்லைப்பிட்டி மண்கும்பான் ஆகிய இரண்டு கிராமங்களிலும் உள்ள மூன்று பாடசாலைகளிலும் பயிலும் மாணவர்களையும், ஆசிரியப் பெருமக்களையும் சேர்த்தால் ஊர்வலத்திற்கு ஆகக் குறைந்தது 700 பேரையாவது சேர்க்க முடியும். இந்தத் திட்டத்தின்படி செயற்பட்ட அவர்கள் அல்லைப்பிட்டியிலுள்ள இந்துப் பாடசாலை, கிறீஸ்தவப் பாடசாலை, மண்கும்பானிலுள்ள இந்துப் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளையும் நிர்வகித்த அதிபர்களை அணுகி வெற்றி கண்டனர். 
இதில் பாடசாலைகளின் பெயர்களை 'இந்துப் பாடசாலை', கிறீஸ்தவப் பாடசாலை என நான் குறிப்பிட்டதற்குக் காரணம் எங்களது காலத்தில் பாடசாலைகளின் பெயர்களை மக்கள் அவ்வாறே அழைத்தனர். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாலயத்தை கிராம மக்கள் 'சைவப் பள்ளிக்கூடம்' எனவும், அல்லைப்பிட்டி ரோமன் கத்தோலிக்கப் பாடசாலையை மக்கள் 'வேதப் பள்ளிக்கூடம்' எனவும், மண்கும்பானில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை மக்கள் 'மண்கும்பான் பள்ளிக்கூடம்' எனவும் அழைத்தனர். கிராமத்தில் எந்தவொரு விடயத்தையும் மக்கள் சமயம் சார்ந்தோ அல்லது 'சாதி' சார்ந்த கண்ணோட்டத்துடனோதான் பார்த்தனர் என்பதற்கு இதைவிடவும் பல உதாரணங்கள் கூற முடியும்.
இரண்டு கிராமங்களின் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள்(மாணவியரும் அடக்கம்), ஆசிரியர்கள் என பல தரப்பட்ட பிரிவினரின் ஒத்துழைப்புடன் 1984 ஆம் ஆண்டு வைகாசி மாதம் இந்த ஊர்வலம் ஒழுங்கு செய்யப் பட்டது. இந்த ஊர்வலத்தில் வந்தவர்களின் பிரதான கோஷங்கள் "நமது வளம் மண் வளம், மண் வளத்தை அழிக்காதே" "நமது வளம் நீர் வளம், நீர் வளத்தை அழிக்காதே" என்பதாக இருந்தது. இந்த ஊர்வலம் மண்கும்பான் சிவகாமி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து அல்லைப்பிட்டியில் இருக்கும் கிறீஸ்தவத் தேவாலயமாகிய 'உத்தரிய மாதா ஆலயத்தில்' நிறைவு பெறுமாறு ஒழுங்கமைக்கப் பட்டது. 
வழமையாக மிகவும் நிசப்தத்துடன் காணப்படும் இவ்விரு கிராமங்களும் வரலாற்றில் முதல் தடவையாக 700 க்கு மேற்பட்டவர்களின் கண்டன ஊர்வலத்தைக் கண்டு அதிர்ந்தது மட்டுமின்றி, ஆச்சரியமும் கொண்டன. ஊர்வலத்தில் வந்தவர்களின் கோஷம் வானத்தைத் தொட்டது. இவர்களின் கோஷம் மனச் சாட்சியுள்ள ஒவ்வொரு மனிதனின் இதயக் கதவையும் தட்டியிருக்கும் என்று நீங்கள் நம்பினால் ஐயோ! பாவம் நீங்கள். இந்த ஊர்வலம் நிறைவு பெறும் இடமாகிய 'உத்தரிய அன்னை தேவாலயத்தில்' ஊர்வலத்தின் முடிவில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மண்கும்பானிலிருந்து மணலை ஏற்றியபடி மேற்படி ஆலய முன்றலில் செல்லும் வீதியூடாக ஒரு டிராக்டர் உறுமிக் கொண்டு வந்தது. உணர்ச்சிப் பிழம்பாக நின்ற ஊர்வலக் கூட்டம் டிராக்டரை சுற்றி வளைத்துக் கொண்டது. அந்த டிராக்டரில் ஒரு லோடு மணல் இருந்தது. அந்த டிராக்டரின் சாரதியை அடித்து, உதைக்கும் ஆத்திரத்தில் கூட்டத்தினர் அவரை நெருங்கினர். நிலைமையின் பாதகத் தன்மையை உணர்ந்துகொண்ட டிராக்டரின் சாரதி, நடிகர் திலகத்தை மிஞ்சும் விதத்தில் "நான் ஒரு ஏழை, நான் கூலிக்காகவே இந்த டிராக்டரை ஓட்டுகிறேன், இதில் வரும் வருமானத்தை வைத்துத்தான் என் பொண்டாட்டி, பிள்ளைகளைக் காப்பாற்றி வருகிறேன்" என்று உருக்கமான வசனங்களை உதிர்த்தார். அவ்வளவுதான் கோபத்தில் நின்றோர் எல்லாம் 'குணக் குன்றுகளாக' மாறினர். "களிறோடு சண்டையிடு, கட்டெறும்பை விட்டுவிடு" எனப் புற நானூற்றுத் தமிழர்களாக மாறி அவரை மன்னித்து, "திரும்பிப் பார்க்காமல் ஓடிப்போ, நீ அல்லைப்பிட்டிக்கு/மண்கும்பானுக்கு மணல் ஏற்ற வருவது இன்றே கடைசியாக இருக்கட்டும்" என்று கூறி விட்டு விட்டனர்.
இந்த ஊர்வலம் இரண்டு கிராம மக்களின் ஒற்றுமை உணர்வையும், பொது விடயத்தில் அவகளது கருத்தொருமித்த 'எதிர்வினையையும்' புலப்படுத்தியது ஆயினும் அதில் பல குறைபாடுகளும் இருந்தன.அவையாவன.

  1. இந்த ஊர்வலத்தினால் அதற்குப் பின்னான காலப் பகுதியில் எந்தவித மாற்றமும் எற்படவில்ல. 'மணல் ஏற்றுதல்' என்ற சமூக விரோதச் செயல்1986 சித்திரை மாதம் பண்ணை வீதிப் போக்குவரத்து தடைபடும்வரை தொடர்ந்து நிகழ்ந்தது.
  2. இந்த ஊர்வலம் முடிவில் ஒரு மனுவோ, கோரிக்கையோ அரச அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப் படவில்லை.
  3. ஊர்வலத்தில் கலந்து கொண்ட 700 பேரைத் தவிர ஏனைய கிராம மக்கள் இந்த விடயத்தை தங்களையும் பாதிக்கும் ஒரு 'சமூகப் பிரச்சனை' என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவேயில்லை.
  4. இந்த ஊர்வலமானது ஊரின் மணல் வளத்தை அபகரித்த விஷமிகளின் மனங்களில் எந்தவித மாற்றத்தையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. "திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று மக்களும் வாளாவிருந்து விட்டனர்.
இவ்வாறு குறைபாடுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் 1945 ஆம் ஆண்டில் வீசப்பட்ட அணுக் குண்டுகளால் இப்போதும் ஜப்பானில் உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதுபோல், அல்லைப்பிட்டியிலும், மண்கும்பானிலும் 'மணற் கொள்ளையின்' தாக்கம் இன்றுவரை தென்படுகிறது. 'மணற் பாங்கான' நிலம் உள்ள கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் எங்கள் இரண்டு கிராமங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் இரண்டு இணையங்களில் அல்லைப்பிட்டி, மண்கும்பான் கிராமப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பற்றிய புகைப் படங்களையும், காணொளிகளையும் பார்த்தபோது இதயம் வலித்தது. முப்பது வருடத்திற்கு முந்திய தலைமுறையும், சமூக விரோதிகளும் செய்த தவறுக்கான விலையை தற்போது அங்கு வாழும் அப்பாவி, சராசரி மக்கள் செலுத்துகின்றனர்.

(இன்னும் சொல்வேன்)   




 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி